☰
×

உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை சுட்டுத் தள்ளிய காதலன்

 

உத்தரப் பிரதேசத்தில் 19 வயது இளம்பெண் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த கமல் ராய்க்வார், சஞ்சல் என்ற பெண்ணை சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த சஞ்சலின் குடும்பத்தினர், கமலுடனான அவரது உறவை எதிர்த்ததோடு, அவருக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. திருமண ஏற்பாடுகளைப் பற்றி அறிந்த ஆத்திரமடைந்த கமல், சஞ்சலின் வீட்டிற்குள் நுழைந்து, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். கொலை நடந்த ஐந்து மணி நேரத்திற்குள், கமல் ராய்க்வாரை போலீசார் கைது செய்தனர். சஞ்சலைக் கொன்ற பிறகு தற்கொலை செய்துகொள்ள விரும்பியதாகவும் கமல் போலீசிடம் கூறியுள்ளார். இருப்பினும் ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சலை கண்டதும் பயத்தில் அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.

கொலையைத் தொடர்ந்து, குற்றவாளியைக் கண்டுபிடிக்க நான்கு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டன. பின்னர், ஜான்சி-ஷிவ்புரி நெடுஞ்சாலை அருகே கமல் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர். காவல்துறையினர் அவரைக் கண்டதும், கமல் தப்பி ஓட முயன்றார். அவரைத் தடுக்க அதிகாரிகள் முயன்றபோது, ​​கமல் துப்பாக்கியால் சுட்டார். தற்காப்புக்காக காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில், அவரது காலில் குண்டு பாய்ந்தது. அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.