×

திருமணம் நடந்த 2 மாதங்களில் நடந்த கொடுமை- மனைவியை கொலை செய்த கணவன்

 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் 29 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தி் வசித்துவருபவர் கஜேந்திர சங்க்வார் (30). கட்டுமான கொத்தனாராகப் பணிபுரியும் கஜேந்திரா தனது முதல் மனைவியை விட்டுவிட்டு, அஸ்மா என்பவரை மதம் மாறி திருமணம் செய்துகொண்டார். அஸ்மா தனது பெயரை சப்னா என்று மாற்றிக்கொண்டார். கஜேந்திராவுக்கு, முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், முதல் மனைவி மற்றும் அவரது மகனை விட்டு, சப்னாவை திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது சப்னா தனது கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்ததாகவும், இதனால் வாக்குவாதம் முற்றி, ​​கஜேந்திரா அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார் எனக் கூறப்படுகிறது. சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்தனர். 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சப்னாவைத் தங்கள் வாகனத்தில் அக்பர்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். காவல்துறையினர் கஜேந்திராவைக் கைது செய்து அவரிடம் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர் "நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்" என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.