×

எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை - 2 பேர் கைது

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே காவல் சார்பு ஆய்வளர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமாக சிக்கனூத்து கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றான். இந்த நிலையில், ஒரு மாதம் முன்பாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டன் இந்த தோப்பில் தந்தையுடன் வேலைக்கு சேர்ந்தான். நேற்று மூர்த்தியின் இளைய மகன் தங்கபாண்டி மனைவியுடன் தோப்புக்கு வந்தான்.மது பருகியிருந்த இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தோப்பின் மேலாளர் ரங்கசாமி குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றார். தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் அழகுராஜா, மேலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது ரத்த காயத்தில் இருந்த மூர்த்தியை பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், மருத்துவ உதவி செய்ய 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து இருக்கின்றார். ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சம்பவம் குறித்து விசாரித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், இதுபோன்று சண்டையிட கூடாது என்றும், வாக்குவாதம் தவிர்த்து இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றார். அப்பொழுது ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரிடம், "எங்கள் குடும்பத்தகறாரில் தலையிட நீ யார் ?" என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் மகன்களுடன் மூர்த்தியும் சேர்ந்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் உடன் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றான். வாக்குவாதம் வீரியமடைந்த நிலையிலெ, "போடுடா அவன" என மூர்த்தி தெரிவிக்க, மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் உள்ளிட்டோரை இளநீர் வெட்டும் அரிவாளுடன் வெட்ட துரத்தி இருக்கின்றனர். அப்போது எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல், சக போலீசான அழகுராஜா, மேலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் தப்பித்து ஓடினர். 50 மீட்டர் தூரம் இருளில் தென்னந்தோப்பில் ஓடிய எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலை, மூர்த்தி மற்றும் மூர்த்தியின் மகன்களான மணிகண்டன் தங்கபாண்டி என மூன்று பேரும் சுற்றி வளைத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சண்முக பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே காவல் சார்பு ஆய்வளர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வந்த கொலையாளிகளான தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைய வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக உடுமலை குடிமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் செல்ல உள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.