×

சொத்துக்காக தாய், தந்தையை வெட்டிய மகன்- மருமகளுக்கு வலைவீச்சு

 

பண்ருட்டி அருகே சொத்துக்காக பெற்ற தாய், தந்தையை அரிவாளால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்திய மகன் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள அரசடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரத்தினசாமி (68), அவரது மனைவி புஷ்பாவதி (58). வயதான தம்பதியான இவர்களுக்கு தணிகைவேல், தங்கமணி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் தனிமையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பாகப்பிரிவினை செய்யாத சொத்தினை முதல் மகன் தணிகைவேல் தனது மனைவியின் பெயரில் மாற்றி வங்கியில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்தனர். தகவல் அறிந்த மூத்த மகன் தணிகைவேல் தனது மனைவி சௌமியாவுடன் சேர்ந்து கொண்டு சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தணிகைவேல் கையில் வைத்திருந்த அறிவாளால் பெற்ற தாய், தந்தை என்றும் பாராமல் இருவரையும் தலை மற்றும் கால் பகுதியில் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அரிவாளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ரத்தினசாமி, புஷ்பாவதி ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மகன் தணிகைவேலுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மருமகள் சௌமியாவை தேடி வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தாய் தந்தையை அறிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.