×

கள்ளக்காதலுடன் சென்ற தாய்... மீண்டும் வந்து சொத்து கேட்டதால் அடித்து கொன்ற மகன்

 

ஆடுதுறையில் கட்டிய கணவனையும், பெற்ற மகன்களையும் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற தாய், திரும்பி வந்து சொத்தை கேட்டதால் கடப்பாரையால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை பிஸ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் ஆடுதுறையில் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பிருந்தா (வயது 40). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு பிருந்தா வேறு ஒருவருடன் வீட்டை விட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார். இதனால் ஸ்டாலின் இரண்டாவதாக உமாமகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்டாலின் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும், சொத்தில் பங்கு வேண்டும், என ஸ்டாலினின் முதல் மனைவி பிருந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பிருந்தாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பிருந்தா யாருடன் சென்றாரோ அவரும் இறந்து விட ஐந்து நாட்களுக்கு முன் ஆடுதுறையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு வந்து பிருந்தா தங்கி உள்ளார். சொத்தில் பங்கு வேண்டும், வீடு வேண்டும் என தனது மகன் அருண்குமாரிடம் பிருந்தா கேட்டதாக தெரிகிறது. “எங்களை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய உனக்கு சொத்தில் பங்கு கிடையாது. வீட்டை விட்டு வெளியே போ” என அருண்குமார் தாயிடம் சண்டை போட்டதாக தெரிய வருகிறது. வீட்டை விட்டுச் சென்ற முதல் மனைவி பிருந்தா வீட்டிற்கு வந்ததும், இரண்டாவது மனைவி உமா மகேஸ்வரி திருநாகேஸ்வரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில்  வீட்டிற்கு வந்த பிருந்தா, இருக்கும் வீட்டினை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என மகன் அருண்குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக தாய் பிருந்தாவுக்கும் மகன் அருண்குமாருக்கும் இன்று காலை முதல் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அருண்குமார் வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து தாய் பிருந்தாவை அடித்ததாகவும், இதில் பலத்த காயமடைந்த பிருந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த பிருந்தாவின் மகள் தனது அம்மாவை, அண்ணன் அடித்து விட்டதாக 100க்கு தகவல் கொடுத்துள்ளார்.தகவல் அறிந்து வந்த போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்த போது பிருந்தா இறந்த நிலையில் இருந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அருண்குமார் மற்றும்  குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.