மாமியாரை வெட்டி படுகொலை செய்த மருமகன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாமியாரை வெட்டி படுகொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துமலை பவுண்டு தெருவை சேர்ந்த சமுத்திர பாண்டி -துரைச்சி(50) ஆகியோரது மகள் காளீஸ்வரி. இவருக்கும் சேர்ந்தமரம் அருகில் உள்ள பொய்கை கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு எட்டு மற்றும் ஆறு வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதுபோல கடந்த மூன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபம் கொண்ட காளீஸ்வரி, தன் இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். திங்கள் கிழமை மனைவியை அழைப்பதற்காக ஊத்துமலை வந்த பாலசுப்பிரமணியனுக்கும், காளீஸ்வரிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றுள்ளார். இதனை தடுப்பதற்காக வந்த மாமியார் துரைச்சிக்கு கழுத்தில் வெட்டு விழுந்து உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஆத்திரம் தீராமல் காளீஸ்வரியையும் வெட்ட முயன்ற போது, அவரது கையில் வெட்டு விழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் தப்பி சென்று விட்டார். இது குறித்து ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துரைச்சியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காளீஸ்வரிக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற பாலசுப்பிரமணியனை அவரது சொந்த ஊரான பொய்கையில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.