தூத்துக்குடியில் பரபரப்பு! இளைஞர் அடித்துக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகேயுள்ள மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் கணேசமூர்த்தி (25), சென்ட்ரிங் தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலடிபட்டியில் தங்கி அப்பகுதியில் வேலை செய்து வந்ததுடன், அவ்வப்போது தனது சொந்த கிராமமான மகாராஜபுரத்திற்கும் வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை மகாராஜபுரம் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சுடுகாடு அருகிலுள்ள காட்டுப்பகுதியில், ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் கவனித்து, மணியாச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கணேசமூர்த்தி என்பதும், அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க மணியாச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.