ஏன் எங்க வீட்டு பெண்ணை காதலிக்கிற?- வாலிபரை கொடூரமாக கொன்ற உறவினர்கள்
நெல்லை களக்காடு அருகே இளம்பெண்ணை காதலித்ததால் உறவினர்கள் ஆத்திரத்தில் வாலிபரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு படலையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, பேச்சியம்மாள். இவர்களின் இளைய மகன் சுரேஷ் (வயது 21). சுரேஷும் அவரது வீட்டின் அருகே உள்ள தளவாய் என்பவரின் மகளும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுரேஷின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ள கூலித்தொழிலாளி குடும்பம். தளவாய் குடும்பத்தினர் வசதி படைத்தவர்களாக அந்த பகுதியில் திகழ்கிறார்கள். காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரிய வந்த நிலையில் தளவாய் சுரேசை கூப்பிட்டு தனது மகளுடனான காதலை கைவிடுமாறு அடிக்கடி எச்சரித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மே.1 ஆம் தேதி சுரேஷை அந்தப் பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஒரு நபரை மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யாமல் பொய்யாக கைது செய்து விட்டோம் எனக்கூறி சுரேஷின் பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட சுரேஷின் உடலை அடக்கம் செய்து விட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்பட்ட டிஎஸ்பி அலுவலகம் என பல்வேறு இடங்களில் சுரேஷின் தாய் பேச்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் சென்று மனு கொடுத்துள்ளனர். இருந்த போதிலும் சுரேஷின் கொலையில் தொடர்புடையவர்களை முழுமையாக கைது செய்யவில்லை. இதனால் கொலையான சுரேஷ் தாய் பேச்சியம்மாள் தனது குடும்பத்தோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து மனு கொடுக்க வந்தார். ஒரே சமூகமாக இருந்த போதிலும் நாங்கள் வசதி இல்லாதவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து என் மகனை கொலையும் செய்து விட்டார்கள். எங்கு சென்றாலும் உங்களை அழைக்களிக்கிறார்கள். என் மகன் சாவிற்கு நீதி வேண்டும் எனக் கூறி கண்ணீர் மல்க சுரேஷ் தாய் பேச்சியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.