சொத்து தகராறு- அண்ணனை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட தம்பி
இராமநாதபுரம் அருகே சொத்து தகராறில் உடன் பிறந்த அண்ணனை வீட்டில் மேல் தளத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு கொல்ல முயன்ற தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கும் இவரது தம்பி துரைச்சிங்கத்திற்கும் இடையே சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக இராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், துரைசிங்கம் வீட்டின் மேல் தளத்தில் மழை நீர் வெளியேற தகர கூரை அமைத்துக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக ரெத்தினசாமிக்கும், துரைச் சிங்கத்திற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துரை சிங்கம், ரத்தினசாமியை வீட்டின் மேல் தளத்தில் இருந்து அருகே கீழே உள்ள கிணற்றில் தள்ளி விட்டு கொல்ல முயன்றார். நல்வாய்ப்பாக சுற்றுச்சுவர் மீது விழுந்ததில் ரெத்தினசாமி தண்டுவடத்தில் படுகாயமடைந்து மயங்கினார். அவரது உறவினர்கள் ரெத்தினசாமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரெத்தினசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரெத்தினசாமி அளித்த புகாரின்பேரில், கொலை முயற்சி உற்பட 3 பிரிவுகளின் கீழ் தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைச் சிங்கத்திடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சொத்திற்காக உடன் பிறந்த அண்ணனை கிணற்றில் தள்ளிவிட்டு தம்பி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.