×

திருச்செந்தூர் அருகே கோவில் வளாகத்தில் பூசாரி வெட்டிக்கொலை

 

திருச்செந்தூர் அருகே கோவில் வளாகத்தில் கோவில் பூசாரி  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகேசன்(54). இவர் ஆறுமுகநேரி போலீசார் சோதனை சாவடி அருகே சாலை ஓரத்தில் உள்ள சுடலை மாட சுவாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல காலையில் கோவிலுக்கு முருகேசன் வந்துள்ளார். ஆறுமுகநேரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே கோவில் முன்புள்ள மரத்தடி நிழலில் ஓய்வு எடுத்துள்ளார்.
 
இதற்கிடையில் மதியம் சுமார் 3 மணி அளவில் மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து மனைவி தண்ணருடன் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு முருகேசன் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் போலீஸ் சோதனை சாவடி அருகே கோவில் பூசாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.