“அழைச்சிட்டு போய்டுங்க”- மகளின் கடைசி கோரிக்கையை காதில் வாங்காத பெற்றோர்! பிணமான கொடுமை
பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் 22 வயது பெண் கணவரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைசாலியை சேர்ந்த 29 வயதான சுஜீத் என்பவருக்கும், 22 வயதான ஆஷா என்ற பெண்ணுக்கும் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்குமே இரண்டாவது திருமணம் என சொல்லப்படுகிறது. சுஜீத்தின் முதல் மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஷாவின் முதல் கணவரும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அந்தத் திருமணத்தின் மூலம் ஆஷாவுக்கு ஐந்து வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு, தனது தாயை, அப்பா தடியால் அடித்ததாக அக்குழந்தை வாக்குமூலம் அளித்துள்ளது. சம்பவம் நடந்தபோது வீட்டில் தாத்தா, பாட்டி யாரும் இல்லை என்றும், அப்பா, அம்மாவை அடித்துவிட்டு ஓடிவிட்டதாகவும் அழுதபடி அக்குழந்தை போலீசாரிடம் கூறியுள்ளது.குழந்தைகள் விஷயத்தில் தம்பதி இடையே அடிக்கடி தகராறுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. அக்டோபர் 4, ஞாயிற்றுக்கிழமை இரவு, அத்தகைய ஒரு தகராறின் போது ஆஷா தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். திருமணத்திற்குப் பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு நிலைமை நன்றாக இருந்ததாகவும், அதன்பிறகு சுஜீத்தின் நடத்தை மாறியதாகவும் ஆஷாவின் தாய் குற்றம் சாட்டினார். கொலைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சுஜீத்துக்கு ஆஷா உணவு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், ஆஷா தனது குடும்பத்தினரை அழைத்து, "என்னை அழைத்துச் செல்லுங்கள், இல்லையென்றால் அவர் என்னை உயிருடன் விடமாட்டார்கள்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது குடும்பத்தினர் காலையில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினர். மறுநாள் காலை, அப்பகுதிவாசி ஒருவர் குடும்பத்தினரை அழைத்து ஆஷா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கொலையாளி சுஜீத்தை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.