சாலையோரம் தூங்கிய 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வட மாநில தொழிலாளி
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் நள்ளிரவில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வட மாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுத்தாய் (65). இவர் தனியாக தெருவில் தங்கியிருந்து, சாலை ஓரங்களில் கிடைக்கும் பழைய இரும்பு, காலி பாட்டில்களை எடுத்து விற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில் சாலையோரம் இரவு உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறங்கிய இடத்தின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு 11 மணியளவில் வட மாநில தொழிலாளர், பொன்னுத்தாய் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுத்தாய் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். இதனைப் பார்த்த அந்த வட மாநில தொழிலாளி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது தப்பித்துச் சென்ற நபரை மடக்கி பிடித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த பொன்னுத்தாயை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில் ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம், குழுவா பகுதியைச் சேர்ந்த சங்கர் மாலிக் மகன் சமீர் மாலிக் (23) என்பதும், சம்பவம் நடைபெற்ற போது அவர் குடி போதையில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சமீர் மாலிக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.