சொத்துக்காக சித்தப்பாவை கொலை செய்து கிணற்றில் வீசிய அண்ணன் மகன்!
எடப்பாடி அருகே சித்தப்பாவை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற அண்ணன் மகன் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மாக்கனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (47). திருமணமாகாத கூலி தொழிலாளியான இவர்,கடந்த 27ம் தேதி காலை கள்ளுக்கடை அருகிலுள்ள சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக மீட்டார். உடனே அவரது உடலை பூலாம்பட்டி போலீசார்பிரேத பரிசோதனைக்காக சேலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து ராமச்சந்திரன் மது போதையில் தானாக கிணற்றில் தவறி விழுந்து இறந்திருப்பாரா? அல்லது எவரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி | சென்றனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது ராமச்சந்திரனின் அக்கா பொன்னுத்தாயி தம்பியின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது ராமச்சந்திரனின் அண்ணன் மகன் பிரகாஷ் 2 ஏக்கர் 40 செண்ட் நிலத்திற்காக சித்தப்பாவை கம்பியால் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. உடனடியாக பிரகாஷை கைது செய்த பூலாம்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.சொத்திற்காக சித்தப்பாவை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற அண்ணன் மகன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.