×

சொத்து கேட்ட மகனை கூலிப்படை ஏவி கொன்ற தாய்

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9  ஆம் தேதி லாரி உரிமையாளர், நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பகீர் உண்மை வெளியாகியுள்ளது.

மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம்- அம்சவள்ளி தம்பதியினர். இவருக்கு அமிர்தராஜ், பாலு என்ற சதீஸ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் (32). சொந்தமாக லாரி ஒன்றை வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், 2 வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இவர் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் உள்ள 7வது குறுக்கு சாலையில் வசித்து வருகிறார். 

சதீஸ்குமார் சொத்தில் பங்கு கேட்டதால் கடந்த சில  மாதங்களுக்கு முன் கன்னியாக்குடியில் உள்ள நிலத்தை ரூ.1. 25 கோடிக்கு விற்று அண்ணன்,தம்பி என இருவருக்கும் தலா ரூ.40 லட்சம் பணம் கொடுத்துள்ளனர் பெற்றோர். மதுவுக்கு அடிமையான சதீஸ்குமார் பணத்தை எல்லாம் செலவழித்து விட்டு தன் தாயிடமிருந்த மீதி பணத்தை கேட்டு தொல்லை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இவரின் அட்டகாசத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாய் அம்சவள்ளி, சதீஸ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சதீஸ்குமாரின் நண்பரான மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நலராஜா என்கிற புல்லட் ராஜா மூலம் கொலை செய்ய சொல்லி அதற்கு, ரூ. 5 லட்சம் பேரம் பேசி ரூ. 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சதீஸ்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட நண்பர் புல்லட் ராஜா மற்றும் நண்பர்கள் கடந்த 7 ஆம் தேதி மதியம் சதீஸ்குமாருடன் ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில் அனைவரும் மது அருந்தியுள்ளனர். மது போதையின் உச்சத்தில் இருந்த சதீஸ்குமாரை ஏரியில் இருந்த  தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனர்.  இதனையடுத்து கொலை பற்றி தெரியாமல் இருக்க  கம்பியால் கை,கால்கள் கட்டப்பட்டு உடலில் கல்லை கட்டி 10 அடி ஆழ  தண்ணீரில்  வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த நலராஜா என்கின்ற புல்லட் ராஜா (41), கொத்தனார் ராஜா(31),சுரேஷ் பாண்டி என்கின்ற சுரேஷ்,ஷேக் அப்துல்லா(45),அரவிந்த்சாமி(19) தாய் அம்சவள்ளி(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள பிச்சைமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.