×

8 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

 

திருக்கழுக்குன்றம் அருகே 8 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தில் வசிப்பவர் டில்லி. இவரது மகள் கிருஷ்ணவேணி என்பவரை கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு வாலாஜாபாத் அகரம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து கிருஷ்ணவேணி ஈச்சங்கரணை கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து எட்டு வருடமாக தாய், தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த கிருஷ்ணவேணி நேற்றிரவு அனைவரிடம் நன்றாக பேசி சாப்பிட்டு உறங்கச் சென்றுள்ளார். அதன் பின்னர் நள்ளிரவில் கிருஷ்ணவேணியும் அவரது 8 வயது மகள் சுபஸ்ரீ படுக்கையறையில் இல்லை என்பதால் சகோதரர் மற்றும் பெற்றோர் அவர்களை தேடி வந்தனர். அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றில் கிருஷ்ணவேணி சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் உடனடியாக திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்த கிருஷ்ணவேணியை மீட்டனர். பின்னர் கிணற்றில் மூழ்கியிருந்த சுபஸ்ரீயை நீண்ட நேரமாக தேடிய பின் கிணற்றின் இடுக்குகளில் சிக்கியிருந்த சுபஸ்ரீ உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாய் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈச்சங்கரணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.