×

ஒரே கிராமத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் - கணவன்கள் தலைமறைவு

 

ஒரே கிராமத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடந்து அந்த இரண்டு சிறுமிகளின் கணவனும் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருப்பது  அக்கிராமத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.    அரியலூர் மாவட்டத்தில் தான் இந்த பரபரப்பு நிலவுகிறது.

 அம்மாவட்டத்தில் உடையார்பாளையம் அடுத்த  தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.   இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அச்சிறுமியின் சம்மதமில்லாமல் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

 பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணமான அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததும்,     ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்று அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.   அப்போது 15 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்த மருத்துவ அலுவலர்கள் அரியலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுக்க,   அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் தகவல் சொல்லி இருக்கிறார்கள். 

 உடனே ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோரையும்,   ராஜ்குமார் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.   ராஜ்குமார் மட்டும் போலீஸார் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.   போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 இந்த நிலையில்,   அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் வர , இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் ரவி, ரேவதி ,ரஞ்சித் குமாரின் பெற்றோர்கள் இளவரசன் சங்கீதா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

 அதேநேரம் ரஞ்சித் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகி இருக்கிறார்.  அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 ஒரே கிராமத்தில்  இரண்டு சிறுமிகளை திருமணம் செய்த இரண்டு கணவர்களும் தலைமறைவாகி இருப்பதும்,  இரண்டு குடும்பத்தினரும் கைதாகி இருப்பதும் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.