×

மதுரையை நடுங்கவிட்ட கொலை... 17 மணி நேரத்திற்கு பின் தலையை கண்டுபிடித்த போலீஸ்! கள்ளத்தொடர்பால் விபரீதம்

 

திருமணம் முடிந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்து தலையை துண்டித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரியஉலகாணி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -லட்சுமி என்பவரது மகன் மணிகண்டன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஆவியூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி மணிகண்டன் காணாமல் போனதாக அவரது தாய் லட்சுமி விருதுநகர் மாவட்டம், ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து காணாமல் போன மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் வேலை செய்த இடத்தில் மணிகண்டன் காணாமல் போன தேதியன்று ஒருவர் உடன் இருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவானது. அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆவியூர் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த நபர் கொக்குளத்தைச் சேர்ந்த பாரதிராஜா (27) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பாரதிராஜா தலைமுறைவான நிலையில் மணிகண்டனுக்கும் பாரதிராஜாவுக்கும் ஏதோ தொடர்பு உள்ளதாக கருதி போலீசார் விசாரித்து வந்த நிலையில் தலைமறைவான பாரதிராஜா (27) மற்றும் விக்னேஷ்வரன் (24), மதன்ராஜ் (16) ஆகிய 3 பேரை ஆவியூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் போலீசாரையை படபடப்பாக்கியது.

கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா (27), மதன்ராஜ் (16) மற்றும் மேலஉப்பிலிக்குண்டை சேர்ந்த விக்னேஸ்வரன் (24), மற்றும் பெரிய உலகாணியைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாரதிராஜாவும், மணிகண்டனும் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் கடன் பிரச்சனையும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மணிகண்டன் தொடர்பில் உள்ள பெண்ணிடம் பாரதிராஜா பேசி வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பாரதிராஜாவிடம் சண்டையிட்டதாகவும்  தெரிகிறது.

இதனை அடுத்து மணிகண்டனை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்த பாரதிராஜா கடந்த 7 தேதி இரவு ஆவியூர் தனியார் நிறுவனம் எதிரே ஒரு காட்டுப் பகுதியில் மணிகண்டன் மற்றும் பாரதிராஜா அவர்களது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இந்த பிரச்சினையை பற்றி பேசும்போது இருவருக்கும் கைகலப்பானது. அப்போது பாரதிராஜா மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொலை செய்து தலையை துண்டித்து பின்னர் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோர் மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே T.கொக்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகே வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்தாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவியூர் மற்றும் கூடக்கோவில் காவல் துறையினர் காணாமல் போன மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கொக்குளம் பாலத்திற்கு அடியில் இருந்து மீட்டனர். ஆனால் காணாமல் போன மணிகண்டனின் தலையின்றி உடல் மட்டும் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார்கள் சம்பவ இடத்தில் தலையை கண்டுபிடித்து தராமல் உடலை வாங்க முடியாது எனக்கூறி கூடக்கோவில் கொக்குளம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மணிகண்டனை கொலை செய்த பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகையோரை ஆவியூர் போலீசார் கைது செய்து  கொலை செய்து தலையை எந்த இடத்தில் போட்டீர்கள் என விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொக்குளம் தரைப்பாலம் அருகே தலையை போட்டு அதன் மீது கல் வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் மணிகண்டன் உடல் போடப்பட்ட பகுதியில் இந்த துர்நாற்றம் அப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் அப்பகுதியில் கோழி கழிவு மற்றும் இறந்து போன நாய் ஒன்றை போட்டுள்ளனர். தற்போது தீயணைப்புத்துறை உதவியுடன் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் மற்றும் 17 மணி நேரம் தீவிர சேடுதலுக்குப் பிறகு தலையை மீட்ட ஆவியூர் போலீசார் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனை கொலை செய்த பாரதிராஜா, விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய பாரதிராஜாவின் நண்பர்களான இரண்டு நண்பர்களை ஆவியூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.