கிட்டிப்புல் விளையாட்டில் பயங்கரம்! இளைஞர் கழுத்தை அறுத்து கொலை
கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறினால் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் சந்தை தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசீலன். 24 வயதான இந்த இளைஞர் தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன்கள் மார்ட்டின், ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சந்தை தோப்பில் கிட்டிப்புல் விளையாடி இருக்கிறார்.
கிட்டிப்புல் விளையாட்டில் மார்ட்டின், ஆரோக்கியதாஸ் ஆகியோருடன் குணசீலனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற நண்பர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் இதில் இரு தரப்பிற்குமே ஆத்திரம் தீராமல் இருந்திருக்கிறது.
விளையாட்டு முடிந்து நேற்று இரவு அனைவரும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது மீண்டும் வாய் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது. அப்போது மார்ட்டின் தனது பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து குணசீலனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.
கழுத்து அறுபட்ட குணசீலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தை பார்த்த மற்ற நண்பர்கள் மார்ட்டின் உடன் வந்த ஆரோக்கியதாசை பிடித்து சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிமடம் போலீசார் இறந்து கிடந்த குணசீலன் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நண்பர்கள் தாக்கியதால் காயம் அடைந்த ஆரோக்கியதாசை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தகராறு நடந்ததில் கொலை சம்பவம் சந்தைதோப்பு பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.