×

கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி! கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம்

 

ஜெய்ப்பூரில் தனது கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மகேஷ் (27). இவரது மனைவி கவிதா மீனா (23). கவிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த மகேஷை, கவிதா கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி, செல்ஃபோஸ் என்ற விஷ மாத்திரையை கவிதா, பழச்சாற்றில் கலந்து மகேஷ்க்கு கொடுத்துள்ளார். அதனை குடித்தவுடன் மகேஷின் உடல்நிலை மோசமானது.

குடும்பத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என நினைத்த கவிதா, மகேஷை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுபோன்று நாடகத்தை அறங்கேற்றினார். அதன்பின் மகேஷின் சகோதரர் மணீஷை தொலைபேசியில் தொடர்புகொண்ட கவிதா, மகேஷின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு வருமாறும் கூறியதாகக் கூறப்படுகிறது.  மணீஷ் வந்தவுடன் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆரம்பத்தில் திடீர் மரணம் என்று தோன்றிய இந்த நிகழ்வு, மகேஷின் தந்தை பாபுலால் மீனா ஆகஸ்ட் 16 அன்று காவல்துறையை அணுகி புகார் அளித்த பிறகு விசாரணைக்கு வந்தது. ஏதோ தவறு நடந்திருப்பதாகக் குடும்பத்தினர் சந்தேகித்த நிலையில், விசாரணையின்போது கவிதா அளித்த முரண்பாடான வாக்குமூலம் குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஆதாரங்களை ஒப்பிட்டு, சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் கவிதா மற்றும் கணேஷைக் கைது செய்ததாக ஜெய்ப்பூர் மேற்கு துணை ஆணையர் பிரசாந்த் கிரண் தெரிவித்தார்.