×

மாமியாருடன் கள்ளத்தொடர்பு- இடையூறாக இருந்த மாமனாரை கொன்ற மருமகன்

 

தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய, மருமகன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் இருப்பதாக, நகர காவல் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்களும், இருசக்கர வாகனமும் தண்ணீரில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சடலமாக கிடந்தவர், எறங்காட்டு கொட்டாயை சார்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆறுமுகம் மனைவி ஜோதி மற்றும் மருமகன் சீதாராமன் இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சீதாராமனும் ஜோதியும் இருவரும் இணைந்து காரணிஓனி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீதாராமன் மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மகள் சந்தியாவை சீதாராமனுக்கு, கட்டாயப்படுத்தி 2-வது  திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் திருமணத்தில்  விருப்பமில்லாத சந்தியா ஓசூர் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். சீதாராமன் மனைவி  வீட்டிற்கு வராததால் ஜோதியும், சீதாராமனும் ஓசூருக்கு சென்று, சந்தியாவை வீட்டிற்கு அழைத்து  தாக்கியுள்ளனர். சந்தியா தனது தந்தை ஆறுமுகத்திடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பழக்கத்திற்கு இடையூறாக மாமனார் ஆறுமுகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட சீதாராமன், தனது நண்பர்களுடன் மாமனாரை ஆறுமுகத்தை பின் தொடர்ந்து சென்று கல்லால் தாக்கி, இருசக்கர வாகனத்துடன் காரில் எடுத்துச் சென்று மதிக்கோன்பாளையம் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்த சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆறுமுகம் மனைவி ஜோதி, முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.