3 ஆண்டுகளில் கசந்துபோன திருமண வாழ்க்கை... மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் திருமணம் நடைபெற்று மூன்றே வருடங்களில் பெண் கழுத்தை நெரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (33) கூலி தொழிலாளி இவர் அதே ஊரான புதுவிடுதி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரி பெண் ஆஷா(23) என்ற பெண்ணை கடந்த 27.6.2022-ல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் நவநீதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 10.11.2025-ஆம் தேதி மர்மமான முறையில் ஆசா வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். கூலி வேலைக்கு சென்று வந்த முருகேசன் தனது மனைவி இறந்து கிடந்திருக்கிறார் என்று கதறி அழுதுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கோபால் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இறந்த பெண் ஆஷாவின் தாயார் மாரியம்மாள் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் ஆசாவின் கணவர் முருகேசனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முருகேசன் ஆஷாவின் கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக முருகேசன் ஆஷாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ஆஷா எம்எஸ்சி பட்டம் பெற்று காவல்துறை பணிக்காக தன்னை தயார்படுத்தி வந்தார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.