×

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு பூச்சி மருந்தை குடித்த கணவன்

 

திருப்பூர் டிகேடி மில் பகுதியில் உள்ள சக்தி அப்பார்ட்மெண்டில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

திருப்பூர் டி.கே.டி மில் பகுதியில் உள்ள சக்தி அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (43). விவசாயியான இவருக்கு பல்லடம் அடுத்த வாவிபாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. இவரது மனைவி சத்யா (41). இவர்களுடைய மகள் சிவநேத்ரா (15) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே செந்தில்குமார் அவரது மனைவி சத்யாவிற்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை இவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மகள் நேத்ராவை வாவி பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், வீட்டில் வைத்திருந்த அறிவாளால் மனைவி சத்யாவை வெட்டி கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டோமே என்ற மன உளைச்சலில் இருந்த செந்தில் குமார், தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்தை குடித்துவிட்டு, தங்களது குடும்ப whatsapp குரூப்பில் தான் மனைவியை கொலை செய்து விட்டதாகவும் தற்பொழுது தானும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார், மேலும் இது குறித்து உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். மனைவியின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் whatsapp குரூப்பில் இருந்த வீடியோவை இன்று காலை பார்த்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் வீரபாண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சத்யா அறிவாளால் வெட்டப்பட்டு ரத்தம் உறைந்த நிலையிலும், செந்தில்குமார் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றி, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவியை வெட்டி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.