கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை அடித்தே கொன்ற மனைவி
தெலங்கானாவில் திருமணத்திற்கு புறம்பான உறவைத் தடுத்ததால் கணவரின் அக்கா மகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மட்குலபள்ளி மண்டலம் சித்யதாண்டா கிராமத்தை சேர்ந்த ராமாவத் ரவி (34). மிரியாலகுடா மண்டலம், எடுகோட்லதண்டாவைச் சேர்ந்த லட்சுமியை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சூர்யாபேட்டையில் படித்து வருகிறார், இளைய மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். ரவி வெமுலபள்ளி மண்டலத்தில் உள்ள சல்குனூர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். லட்சுமி ரவியின் அக்கா மகனான கணேஷுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் ரவிக்கு தெரிந்ததால் தம்பதியினரிடையே ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, லட்சுமி ஒரு வருடம் முன்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். ரவியின் பெற்றோர் பெரியவர்களிடம் பேசி லட்சுமியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்தநிலையில் ஜனவரி 26 ஆம் தேதி, கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. ரவியின் தந்தை லட்சுமணநாயக் ஜனவரி 27 ஆம் தேதி மூத்த மகனை விடுதியில் விடுவதற்காக சூர்யாபேட்டைக்குச் சென்றார். அதே நேரத்தில் ரவி தாயார் வயல் வேலைக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, மகனின் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. பின்னர் விடிந்ததும் மகனும் மருமகளும் அறையை விட்டு வெளியே வராததால் ரவியின் பெற்றோர் கதவைத் திறந்து பார்த்தபோது ரவி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர். மருமகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் காணாமல் போனதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், லட்சுமி இந்த மாதம் 27 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு தங்கக் நகை கடையில் வேலை செய்த ரவியின் அக்கா மகன் கணேஷை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. குடிபோதையில் இருந்த ரவியை, லட்சுமியும் கணேஷும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததை போலீசார் கண்டறிந்தனர். கணேஷ், லட்சுமி மற்றும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகனைத் தேடி போலீசார் தேடி வருகின்றனர்.