மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவன்!
நெல்லை அருகே திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 37). இவர் மூலைக்கரைப்பட்டி பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார். நாள்தோறும் இவரது பத்திர அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் வருகின்றனர். அந்த வேலையில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக மூலைக்கரை பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி முத்துமாரி என்பவர் சுந்தரின் பத்திரம் எழுதும் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது சுந்தர், முத்துமாரி இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முத்துமாரிக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி தனது கணவர் மணிகண்டன் உடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தகராறு முற்றிய நிலையில் முத்துமாரி தனது இரண்டு குழந்தைகளையும், அழைத்துக் கொண்டு சுந்தருடன் முன்னீர்பள்ளம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுந்தரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை சுந்தர் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் முன்னீர்பள்ளம் இட்டேரி வழியாக மூலைக்கரைப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மணிகண்டன் மற்றும் அவரது தம்பி சுடலை இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் சுந்தரை வழிமறித்து அறிவாளால் தங்கள் ஆத்திரம் தீர தீர வெட்டி கொலை செய்தனர். கொலை செய்த சிறிது நேரத்தில் தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு மணிகண்டன் மற்றும் சுடலை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். அதற்குள் சம்பவத்தை அரங்கேற்றி விட்டு சில மணி நேரத்தில் மணிகண்டன் மற்றும் சுடலை இருவரும் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் தாமாகவே முன்வந்து சரணடைந்தனர்.