×

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவர்

 

திருவெண்ணெய்நல்லூர் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்னசெவலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (45). இவரது மனைவி ரேணுகாம்பாள் (36). இவர்கள் இருவரும் காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு  மூன்று  ஆண் பிள்ளைகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரேணுகாம்பாள் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை கணவர் கோவிந்தன் ரேணுகாம்பாளை கண்டித்ததாகவும், ஆனால் தவறான நடவடிக்கையை கைவிடாமல் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரேணுகாம்பாள் மீது கடும் கோபத்தில் இருந்த கோவிந்தன், ஆத்திரத்தில் இருந்து வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ரேணுகாம்பாள் தலையில் கண்மூடித்தனமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரேணுகாம்பாளை உறவினர்கள் மீட்டு திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி  சிகிச்சைக்காக சேர்த்தனர், 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டதால், ஆம்புலன்ஸ் உதவியுடன் ரேணுகாம்பாள் உடலை உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தாயின் உடலைக் கண்டு மகன்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து திருவெண்ணனநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.