மதிய உணவு தாமதம்- மனைவியை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த கணவர்
மதிய உணவு கொண்டுவரத் தாமதமான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி கவிதா. நேற்று மதிய உணவு கொண்டுவர கவிதா தாமதம் செய்ததால், கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சம்பத்குமார், வீட்டில் இருந்த தேங்காய் உரிக்கும் கம்பியால் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த மனைவி கவிதா, திருச்சி சீனிவாசா நகரில் உள்ள ஆர்.ஜே. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த கவிதாவை தேடி மருத்துவமனைக்கு வந்த சம்பத்குமார், ஸ்குரூ டிரைவரால் சரமாரியாக குத்தி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பத்குமாரின் வெறிச்செயலால் பலத்த காயமடைந்த கவிதா, மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
கொலை சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பத்குமாரை தேடிவருகின்றனர்.