குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்து கணவனும் தற்கொலை
சென்னை நங்கநல்லூரில் குடும்ப தகராறில் பேஷன் டிசைனர் வெட்டி கொலை செய்த நிலையில் கணவன் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை நங்கநல்லூர் தில்லைகங்காநகர் 21வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52). இவரது மனைவி நாகலட்சுமி(42). பேஷன் டிசைனராக உள்ளார். இவர்களுக்கு ஹரிஷ் பரத்வாஜ் (21), சைலாஷ் (18) என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கு வேலைக்கு செல்வதில்லை. நாகலட்சுமி நங்கநல்லூர் மற்றும் அண்ணா நகரில் பட்டுபுடவை விற்பனையகத்தை நாகலட்சுமி நடத்திய நிலையில் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ரஷ்யாவில் முதல் மகன் ஹரிஷ்பரத்வாஜ் மருத்துவம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சைலாஷ் சென்னையில் உள்ள பல் மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நாகலஷ்மியும் பட்டுபுடவை விற்பனை, அதன் சார்ந்த புதிய டிசைன், கலர், எளிதாக புடவை கட்டும் விதமாக மாற்றி தருவருது என தொழிலை மேம்படுத்தி அதனை இன்டாஸ்கிராம் பக்கத்தில் பதிவிட்டு 3 லட்சம் பேர் பின் தொடரும் வகையில் பிரபலமாக செயல்பட்டுள்ளார்
இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் செலவிற்கு பணம் கேட்டு நச்சரிப்பதால் கணவன், மனைவிக்குள் பல ஆண்டுகளாக சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சுப்பிரமணி மதுரையில் உள்ள சகோதரி வீட்டில் சில மாதங்கள் இருந்தார். அப்போது, அவரின் முழு செலவிற்கு நாகலட்சுமி ஜி.பே., முலம் பணம் அனுப்பி வைத்தார். கடந்த ஒன்றரை வாரங்களுக்கு முன் சென்னை திரும்பிய சுப்பிர்மணியன் அடிக்கடி மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரி சென்றிருந்த மகனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிய சுப்பிரமணியன்... அதில், நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம். உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேன் வந்து சாப்பிடு என குறிப்பிட்டு உள்ளார். இதனால் சந்தேகமடைந்த சைலாஷ் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஒரு அறையில் ரத்த வெள்ளத்தில் கை, தலை, கழுத்து ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு தாய் நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் மின்விசிறியில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடை நடத்துவதில் கொடுக்கல்- வாங்கல் காரணமாக நாகலட்சுமிக்கு கடன் உள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியத்திற்கும் நாகலட்சுமிக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. பின், வீட்டை விட்டு வெளியேறிய சுப்பிரமணியன் அரிவாளை வாங்கி வந்து மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகலட்சுமி கொலைக்கும், சுப்பிரமணியன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்ற்னர்.