மனைவி வாழ மறுத்ததால் கணவன் செய்த கொடூர செயல்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாத ஆத்திரத்தில் உறவுக்கார பெண் மற்றும் மாமியார் மீது கத்தியால் குத்தியதில் உறவுக்கார பெண் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் சரவணன். கூலித்தொழிலாளியான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில் சரவணன் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்த முருகேஸ்வரி சமத்துவபுரத்தில் உள்ள தனது பெற்றோர்களான குருவையா - சரணமணி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து மது போதையில் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்ற சரவணன் முருகேஸ்வரியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு முருகேஸ்வரியின் தாயார் சரணமணி மற்றும் அவரது வீட்டருகே வசிக்கும் உறவினரான அரியக்காள் (55) என்ற பெண்மணியும் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் மற்றும் அவரது உறவினர் மீது ஆத்திரத்தில் இருந்த வந்த சரவணன் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு சென்று மது போதையில் முருகேஸ்வரியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது அரியக்காள் கண்டித்ததால் ஆத்திரத்தில் சரவணன் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். தடுக்க வந்த மாமியார் சரணமணியை கத்தியால் குத்திய போது அங்கிருந்தவர்கள் தடுத்தும் சம்பவ இடத்தில் இருந்த சரவணன் தப்பியோடி விட்டார். கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த பெண் இருவரையும் மீட்டு அவர்களது குடும்பத்தினர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரியக்காள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். கை, விரல் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த மாமியார் சரணமணி அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக அரியக்காளின் மகன் முனியப்பன் புகாரில் வழக்குப்பதிவு செய்த சின்னமனூர் போலீசார் குற்றவாளியான சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவி வாழ மறுத்த ஆத்திரத்தில் உறவுக்கார பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.