×

குடிபோதையில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடித்தே கொன்ற கணவர் 

 

பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் ஒருவரை அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் கதிர்வேல் என்பவரது விவசாயத் தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவியான சந்திரன், காளீஸ்வரி இருவரும் தோட்டத்தில் தங்கி பணி செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த போது ஆழியார் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரும் இவர்களுடன் விவசாயத் தோட்டத்தில் பணி செய்துள்ளார்.  அப்போது பணியை முடித்துவிட்டு சந்திரன் மற்றும் கருப்புசாமி உள்ளிட்ட அங்கு இருந்தவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் கருப்புசாமி பாலியல் தொந்தரவு செய்ததாக காளீஸ்வரி, தனது கணவர் சந்திரனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் அருகில் இருந்த கட்டையால் கருப்பு சாமியை பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். 

பின்பு நீண்ட நேரம் ஆகியும் கருப்புசாமி நகராமல் இருந்ததை கண்டு அருகில் சென்று பார்த்தபோது கருப்புசாமி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அதே தோட்டத்தில் புதைத்துள்ளனர். இந்நிலையில் இன்று தோட்டத்தில் வழக்கமாக பணி செய்து கொண்டிருந்தவர்கள், துர்நாற்றம் வீசியதால் அருகில் சென்று பார்த்தபோது கைவிரல்கள் மட்டும் தெரிந்த நிலையில் இருந்ததால் உடனடியாக ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை காவல் நிலைய போலீசார் அந்தப் பகுதியில் தோண்டிய போது உடல் ஒன்று புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டதில் சந்திரன் கட்டையால் தாக்கியதில் கருப்புசாமி உயிரிழந்ததாகவும் அவரை மண்ணில் புதைத்து வைத்ததும் தெரியவந்தது. தற்போது உடலை கைப்பற்றிய போலீசார் செய்த அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாகவும் மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆனைமலை காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.