×

பட்டப்பகலில் கணவன், மனைவி கத்தியால் குத்திக் கொலை! சென்னையில் அதிர்ச்சி

 

சென்னை அடுத்த கானத்தூரில் பட்டப்பகலில் கணவன், மனைவி கத்தியால் குத்திக்  கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்(எ) பார்த்தசாரதி(42), இவரது மனைவி ஜமுனா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் பார்த்தசாரதி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் சுசில் தான் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என கூறிய நிலையில் ஜமுனாவிற்கும் சுசிலுக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் சுசிலின் மனைவி கிரிஜாவிற்கும் பார்த்தசாரதிக்கும் வெளியில் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்ட போது, மனைவியை வைத்து ஒழுங்காக வாழத் தெரியாதவன் என திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுசில் மனைவி கிரிஜா(29) வை கழுத்தை அறுத்து துண்டாக்கியுள்ளார், இந்த தகவல் அறிந்து கடற்கரையில் இருந்து ஓடிவந்த சுசிலையும் பார்த்திபன் வெட்டியுள்ளார், இதில்   இருவருக்கும் கழுத்து, நெற்றி, வயிற்றில் சரமாறியாக குத்தியதில் கிரிஜா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சுசிலும் உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளார். தாய் தந்தையை இழந்ததால் தற்போது ஆதரவின்றி தவித்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற பார்த்தசாரதியை கானத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நேற்றுபட்டபகலில் நடந்த இந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.