ஆண் நண்பரை பார்க்கச் சென்ற பெண் காவலர் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கப்பட்ட நான்கே நாட்களில், ஒரு பெண் போலீசே கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வரும் 30 வயது திருமணமான பெண் போலீஸ் ஒருவர், மானாமதுரை அருகே உள்ள தூதை கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராபின் (28) என்பவருடன் பழகி வந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், ராபின் அந்தப் பெண் போலீசை சிவகங்கை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபப் பகுதிக்கு வரவழைத்திருக்கிறான். ஆனால், அங்கே வருவதற்கு முன்பாகவே ராபின், தனது நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த தவெக பிரமுகர் மகாராஜா (29), கல்லூரி மாணவன் ஹரீஸ் (21) ஆகிய இருவருக்கும் மொபைல் போனில் தகவல் கொடுத்து அங்கே வரவழைத்திருக்கிறான்.
சிறிது நேரத்தில் அந்த நண்பர்கள் இருவர் அங்கு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ், அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த மூன்று மிருகங்களும் சேர்ந்து அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளன. அவர்களிடமிருந்து ஒருவழியாகத் தப்பித்து, அரைகுறை ஆடையுடன் பதறியடித்து ஓடிய அந்தப் பெண் போலீஸ், அருகில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சமடைந்து ஆடை கேட்டு வாங்கியுள்ளார். பின்னர், அவசர போலீஸ் எண் 100-க்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிவகங்கை ரோந்து போலீசார், அந்தப் பெண் போலீசை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் கொடூரம் தொடர்பாகச் விசாரணை நடத்திய போலீஸ் ராபின், மகாராஜா, ஹரீஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை சம்பவ இடத்தையோ, பாதிக்கப்பட்ட பெண் காவலரையோ இதுவரை சந்திக்கவில்லை.