திருவண்ணாமலை கிரிவலம் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல்- 8 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்த ரவுடி தலைமையிலான எட்டு பேர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர். தொடர் விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் அண்ணாமலையார் திருக்கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு ஆடைகள் அகற்றி புகைப்படம் எடுத்து அட்டூழியம் செய்துள்ளனர். மேலும் பெண்ணின் நகைகளையும் பிடுங்கியுள்ளனர். பாலியல் தொல்லைதந்த 8 பேர் கொண்ட கும்பலின் தலைவன் வாசுதேவன். அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வாசு தேவனின் செல்போனிலிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை போலீஸார் கண்டு பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.