☰
×

தனது இரண்டரை வயது மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை 

 

குஜராத்தின் வாவ்-தரத் மாவட்டத்தில் உள்ள சுய்காம் என்ற இடத்தில் தனது இரண்டரை வயது மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசோக் ராவல் என்பவருக்கும் அவரது மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை அடுத்து, அவரது மனைவி தனது இரண்டரை வயது மகன் நவகனை கணவனிடமே விட்டுவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாகவே ராவல் நவகனை தனியாக வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. சிறுவனை சுமையாகக் கருதிய, ராவல் நவகன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி மதியம் 2 மணியளவில், இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், கடுமையான தீக்காயங்கள் காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்தான்.

குற்றத்தை மூடிமறைக்கும் முயற்சியாக, குழந்தை இறந்த சிறிது நேரத்திலேயே, ராவல் சில குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து குழந்தையின் உடலை  சுடுகாட்டில் ரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படுகிறது. ராவலின் மாமாவான பாபுபாய் ராவல் இந்தத் துயரச் சம்பவங்களைப் பற்றி அறிந்தபோதுதான் இந்தக் கொடூரமான கொலை வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது காவல்துறையினர் ராவலை கைது செய்து, கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தன் மருமகனின் செயல்களால் அதிர்ச்சியடைந்த பாபுபாய், சுய்காம் காவல் நிலையத்தை அணுகி அவர் மீது அதிகாரப்பூர்வ புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் சுடுகாட்டிற்கு ஒரு குழுவை அனுப்பி, குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, விரிவான பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.