தந்தையே பெற்ற மகனை அடித்து கொலை செய்த கொடூரம்! அதிர வைக்கும் பின்னணி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சங்கம்பட்டியில் இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் மாடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக தந்தையே பெற்ற மகனை அடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம் பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் மதுவுக்கு அடிமையாகி தினம் தோறும் வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மதுபோதையில் அவரது வீட்டில் மொட்டை மாடியில் தூங்குவதற்காக சென்றுள்ளார். காலை வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த கணேசனின் மகன் மோகன்தாஸ் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு கணேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசனின் மகன் மோகன்தாஸ் இது குறித்து அவரது குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காரையூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதற்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் கணேசனின் உடற்கூறு ஆய்வு முடிவில் அவர் அடித்து கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மது போதைக்கு அடிமையாகிய கணேசன் அவரது வீட்டின் மொட்டை மாடியிலேயே ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததால் முதற்கட்ட விசாரணையை காவல்துறையினர் கணேசனின் குடும்பத்தார்களிடமிருந்தே தொடங்கினர். அப்போது கணேசனின் தந்தை கிருஷ்ணன் என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்ட போது கணேசன் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி தினசரி மது போதையில் வந்து குடும்பத்தார்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்து மது போதையில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்த தனது மகன் கணேசனை அதிகாலை 3 மணி அளவில் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி துடிக்க துடிக்க கொன்றதை கணேசனின் தந்தை கிருஷ்ணன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து சந்தேகம் மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றிய காரையூர் கணேசனின் தந்தையான கிருஷ்ணனை கைது செய்தனர்.