×

கஞ்சா பழக்கத்தால் நின்றுபோன திருமணம்... ஆத்திரத்தில் சண்டையிட்ட மகனை கொலை செய்த தந்தை

 

செங்கல்பட்டு அருகே கஞ்சா பழக்கத்தால் திருமணம் நின்ற ஆத்திரத்தில், குடும்பத்தினரைத் தாக்க முயன்ற மகனை தந்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓவர்டன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (50). இவரது மகன் வெஸ்லி (29). இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வெஸ்லிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இவர்களது நிச்சயதார்த்த விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் இரு வீடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மணமகன் வெஸ்லியின் பின்னணி குறித்து பெண் வீட்டார் ரகசியமாக விசாரித்துள்ளனர். அப்போது வெஸ்லிக்குத் தீவிரமான கஞ்சா போதை பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், போதைக்கு அடிமையானவருக்குத் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து தர முடியாது எனக்கூறி, நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தனர். திருமணம் நின்ற செய்தியை அறிந்த வெஸ்லி, மிகுந்த ஆத்திரமடைந்து  போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். தனது பழக்கத்தைப் பெண் வீட்டாருக்குத் தெரியப்படுத்தியது தனது குடும்பத்தினர் தான் எனக்கூறி, தந்தை ஜான்சன் மற்றும் குடும்பத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களைத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காத தந்தை ஜான்சன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வெஸ்லியைத் தாக்கினார். இதில் வெஸ்லியின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், வெஸ்லியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தந்தை ஜான்சனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனின் போதைப் பழக்கத்தால் குடும்பமே சிதைந்த இச்சம்பவம் பெருந்தண்டலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் காட்டும் அக்கறையைப் போலவே, அவர்களின் நட்பு வட்டாரத்தையும், பழக்கவழக்கங்களையும் கண்காணிப்பது மிக அவசியமாகிறது. அதே சமயம், ஆத்திரத்தில் எடுக்கப்படும் ஒரு சில நிமிட முடிவுகள், திருத்த முடியாத பெரும் இழப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. ஒருபுறம் மகனை இழந்த துக்கம், மறுபுறம் கொலைக் குற்றவாளியாக தந்தை என மொத்த குடும்பமும் இன்று நடுத்தெருவில் நிற்கிறது. போதைக்கு அடிமையாவதும், ஆத்திரத்திற்கு அடிமையாவதும் மனித உயிர்களைப் பலிவாங்கும் என்பதைச் சமூகம் உணர வேண்டும்.