மதுபோதைக்கு அடிமையான மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற தந்தை
மதுபோதைக்கு அடிமையாகி அலப்பறை செய்த மகனை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி சடலத்தை எரித்த தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து - கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் குமாரகிரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 29ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக அவ்வழியாக விவசாய பணிக்கு சென்ற நபர்கள் எட்டயபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு விசாரணையில் ஈடுப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை பார்வையிட்டு அப்பகுதியில் ஏதேனும் தடயங்கள் உள்ளனவா? என்று மாவட்ட எஸ்.பி. உட்பட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமின்றி, சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த விபரங்கள் தெரிய வராததால், இது கொலையா? தற்கொலையா? என்பதை முடிவு செய்வதிலும், விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் போலீசாருக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளால் இங்கு வந்து எரித்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து தனிப்படையினர் காட்டுப் பகுதியில் பாதி இருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் கைரேகையை எடுத்து அதிலிருந்து தங்களது விசாரணையில் தொடங்கினர். அந்த கைரேகையை காவல்துறையின் CCTNS PORTAL-ல் பொருத்திப் பார்த்ததுபோது எரிந்த நிலையில் சடலமாக கிடந்த நபர் கோவில்பட்டி அருகே உள்ள கிளவிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகன் செல்வகுமார் (22) என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு ஒன்று உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் யார்? என்று தெரிய வந்தததைடுத்து அவரது சொந்த ஊருக்கு சென்ற போலீசார் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதன் மூலம் போலீசாருக்கு செல்வகுமார் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.
போலீசாரின் விசாரணையில் மகேஷ் தற்போது குடும்பத்துடன் தூத்துக்குடி தாளமுத்து நகரை அடுத்துள்ள ராமதாஸ் நகரில் வசித்து வருகிறார். 22 வயதான இளைஞன் செல்வகுமார் மது மற்றும் கஞ்சா போதைக்கு மிகவும் அடிமையாகி அவர் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி அக்கம் பக்கத்தினருக்கும் பெரும் தொல்லையாக இருந்து வந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் தனது போதைப்பழக்கத்தை கைவிடாத செல்வக்குமாரால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 29-ஆம் தேதி செல்வகுமாரை, அவரது தந்தை மகேஷ், சகோதரர்கள் அரவிந்த்(24), சுஜன்(19) மற்றும் அவர்களது உறவினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காரில் சென்று கொண்டிருந்தபோது செல்வகுமார் அவர்களிடம் போதையில் மீண்டும் சண்டையிட்டு, உங்களை எல்லாம் கொன்று விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகேஷ் உட்பட அனைவரும் செல்வகுமாரை காரில் இருந்தபடியே துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு செல்வகுமாரின் சடலத்துடன் காரில் குமாரகிரி காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்து செல்வகுமார் உடலில் ஊற்றி எரித்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், முதலில் முன்னுக்குப் பின் முரணாக சமாளித்துக் கொண்டிருந்த செல்வகுமாரின் குடும்பத்தினரிடம், அவர்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கும் சிசிடிவி ஆதாரத்தை காண்பித்தவுடன் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, செல்வகுமாரால் தங்கள் நாள்தோறும் பல்வேறு தொல்லைக்கு ஆளாகி வந்ததாகவும், அவனது குடிப்பழக்கத்தை விட மறுத்ததாலும்தான் ஆத்திரத்தில் இவ்வாறு செய்துவிட்டோம் எனக் கூறியுள்ளனர். பின்னர், போலீசார் குற்றவாளிகளான செல்வகுமாரின் தந்தை மகேஷ்(47), சகோதரர்கள் அரவிந்த் (24), சுஜன்(19) மற்றும் உறவினரான பாலகிருஷ்ணன் (37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.