×

`கடனை கட்டலன்னா செத்துவிடு; லோனை குளோஸ் பண்ணிடுறோம்!’- மிரட்டும் பைனான்ஸ் நிறுவனம்… கண்கலங்கும் விவசாயி

தனது டிராக்டர் ஆவணங்களை வைத்து கடன் வங்கிய விவசாயியை சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகே குருவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். விவசாயியான இவர், திருச்சி தில்லைநகரில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது ஆவணங்களை வைத்து 2019ம் ஆண்டு ரூ.1,90,000 ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். மூன்று மாதங்களாக லோனை கட்டி வந்த முருகானந்தத்துக்கு கொரோனா ஊரடங்கு பெரும் இடியாக விழுந்தது. இதனால் வருவாயை
 

தனது டிராக்டர் ஆவணங்களை வைத்து கடன் வங்கிய விவசாயியை சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகே குருவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். விவசாயியான இவர், திருச்சி தில்லைநகரில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது ஆவணங்களை வைத்து 2019ம் ஆண்டு ரூ.1,90,000 ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். மூன்று மாதங்களாக லோனை கட்டி வந்த முருகானந்தத்துக்கு கொரோனா ஊரடங்கு பெரும் இடியாக விழுந்தது. இதனால் வருவாயை இழந்த அவர், 4 மாதங்களாக லோனை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

தனியார் வங்கிகளோ, பைனான்ஸ் நிறுவனங்களோ, மக்கள் வாங்கிய கடனை அடைக்க வற்புறுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் லோன் கடனை 3 மாதங்களுக்கு பிறகு கட்டிவிடுகிறேன் என்று சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திடம் எழுதி கொடுத்துள்ளார் முருகானந்தம். இந்த உத்தரவை காற்றில் பறக்க விடும் நிதி நிறுவனங்கள், லோன் வாங்கியவர்களை மிரட்டியது. அதேபோல், தனியார் பைனான்ஸ் நிறுவனமும் கடந்த சில நாட்களாகவே முருகானந்தத்தை கடன் தொகையைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளது.

இந்த பைனான்ஸ் நிறுவனத்தின் மிரட்டலை தொடர்ந்து வாத்தலைக் காவல்நிலையத்தில் முருகானந்தம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “2019ம் ஆண்டு விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வாங்கினேன். அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.31,500 என 12 மாதத்திற்குள் கட்டவேண்டும் என்று சொன்னார்கள். நான் மூன்று தவணைகள் கட்டிவிட்டேன். கொரோனா ஊரடங்கால் வேலை இல்லை. இதனால் கஷ்டப்பட்டு வருகிறேன். கையில் பணம் இல்லை.

மத்திய அரசு சொன்னது போல் ஊரடங்கு முடிந்ததும் பணம் கட்டுகிறேன் என்று எழுதிக்கொடுத்தேன். ஆனால், பணத்தைக் கட்டச்சொல்லி தினந்தோறும் டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்த மெசேஜில், “நீ வாங்கிய லோனை முடிக்கனும்னா, நீ செத்துட்டேனு உன்னோட டெத் சர்டிபிக்கேட்டை கொடு. லோனை குலோஸ் பண்ணிக்கிடலாம்” குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகவும் மனஉளைச்சலில் இருக்கிறேன். என்னை மிரட்டிய பைனான்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கால் வாங்கிய லோனை கட்ட முடியாமல் தவித்த விவசாயி ஒருவரை தனியார் பைனான்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மிரட்டியுள்ள சம்பவம் திருச்சி விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.