மதுபோதையில் மாமாவை கொன்ற இளைஞர்! புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுபோதையில் தனது அத்தையின் கணவரான 72 வயது முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சின்ன கல்லுவயல் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி என்ற 72 வயது முதியவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லுவயல் சமுதாய கூடத்தில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்து கிடந்த அழகர்சாமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அழகர்சாமியின் மனைவி சின்னம்மாளின் அண்ணன் மகன் விஜய பிரபாகரன்(29) திருமயத்தில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வரக்கூடிய நிலையில், இன்று மதியம் மது போதையில் சின்ன கல்லுவயல் கிராமத்தில் இருக்கும் சமுதாய கூடத்தில் படுத்திருந்த அழகர்சாமியிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் அழகர்சாமியின் கழுத்தில் துண்டை போட்டு கழுத்தை நெறித்து பின்னர் தலையை தரையில் இழுத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து விஜய பிரபாகரன் என்ற (29) வயது இளைஞரை திருமயம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த அழகர்சாமியின் உடலை திருமயம் காவல்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து திருமயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் சமுதாயகூடத்தில் படுத்திருந்த தனது சொந்த அத்தையின் கணவராண 72 வயது முதியவரை இளைஞர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.