×

அணையை சுற்றிப் பார்க்க சென்றனர்… சடலமானார்கள்!- டாக்டர், கல்லூரி மாணவருக்கு நடந்த துயரம்

அணையை சுற்றிப் பார்க்க சென்ற பயிற்சி டாக்டர் மற்றும் பாலிடெக்னி மாணவர் ஒருவர், நண்பர்களின் கண்முன்பே உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரஞ்சித் (25). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனாவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார் ரஞ்சித். இந்நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் பவித்திரன்
 

அணையை சுற்றிப் பார்க்க சென்ற பயிற்சி டாக்டர் மற்றும் பாலிடெக்னி மாணவர் ஒருவர், நண்பர்களின் கண்முன்பே உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரஞ்சித் (25). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனாவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார் ரஞ்சித். இந்நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் பவித்திரன் (17), அவரது அண்ணன் பவீன்குமார் (19), ராஜாசிதம்பரத்தின் மகன் கார்த்திக் (25), கலைச்செல்வனின் மகன் செந்தில்வேலன் (26) மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் ரஞ்சித் கொட்டரை கிராமம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டி முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கொட்டரை அணையை சுற்றிப்பார்க்க சென்றதோடு, கடைசியாக நீர் வழிந்து வெளியேறும் பகுதிக்கு ரஞ்சித், பவித்திரன், செந்தில்வேலன், கார்த்திக் ஆகியோர் சென்றுள்ளனர். மற்றவர்கள் அருகில் இருந்த தரையில் உட்கார்ந்து கொண்டனர். ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரும் நீர் வழிந்தோடும் மிகப்பெரிய தடுப்புச்சுவரின் மேலே ஏறியதோடு, நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். சாய்வு தளத்தில் பாசிப்பிடித்து இருந்ததால், ரஞ்சித்தும், பவித்திரனும் கால் வழுக்கி கீழே விழுந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற கார்த்திக்கும், செந்தில்வேலனும் வழுக்கி விழுந்தனர்.

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்து தங்கள் சேலைகள் மூலம் கார்த்திக்கையும், செந்தில்வேலனையும் காப்பாற்றியுள்ளனர். ரஞ்சித்தும், பவித்திரனும் நண்பர்களின் கண்முன்னே நீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்து காவல்துறையினருகட்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர், தீயணைப்பு, மீட்பு வீரர்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் பவித்திரன் உடலை மீட்டனர். பின்னர் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரஞ்சித் உடல் மீட்கப்பட்டது. இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.