நிச்சயதார்த்தம் செய்த ஜோடி சடலமாக மீட்பு! அறைக்குள் நடந்தது என்ன?
திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட தம்பதியினர் அடுத்தடுத்து சில மணி நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசர்கோடு மாவட்டம் பூச்சக்காட்டைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ (25). இவருக்கும் இருட்டி மாவட்டம் அம்பலத்தட்டாவைச் சேர்ந்த 26 வயதான வி. அமல் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பூச்சக்காட்டில் உள்ள அனுஸ்ரீயின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள். அனுஸ்ரீ கர்நாடகாவிலும், அமல் எர்ணாகுளத்திலும் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு டிசம்பர் 26 அன்று திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் அனுஸ்ரீ செவ்வாய்க்கிழமை இரவு வரை வங்கியில் பணிபுரிந்து வந்தார். அன்று இரவு அவரது சகோதரி தொலைபேசியில் அழைத்தபோது, அனுஸ்ரீ அமலுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறியதாகத் தெரிகிறது. அதன்பின் ஹன்சூரில் உள்ள தனது தங்குமிடத்தில் அனுஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த செய்தியை அறிந்த அமலும், தனது நண்பர்களுடன் நகரில் தங்கியிருந்த எர்ணாகுளம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என்றும், விரிவான விசாரணைக்குப் பிறகே மரணங்களுக்கான சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அனுஸ்ரீயின் உடல் அவரது காசர்கோடு இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு, புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமலின் பிரேதப் பரிசோதனை வியாழக்கிழமை பிற்பகல் நடத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.