×

அரசு பேருந்தை சேதப்படுத்தி ஓட்டுநரை அடித்த கல்லூரி மாணவர்கள் கைது!

 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. சில நேரம் பேருந்தையும் சேதப்படுத்துவார்கள். அதுபோன்றதொரு சம்பவம் தான் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.  வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சாமுவேல், நவின், அருண்குமார். இவர்கள் மூவரும் கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று வில்லிவாக்கம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர்.  

அப்போது அவ்வழியாக வில்லிவாக்கத்திலிருந்து பெசன்ட்நகர் வழி செல்லக்கூடிய அரசுப் பேருந்தும் வந்து கொண்டிருந்துள்ளது. எதிர்பாராவிதமாக பேருந்தும் மாணவர்களின் பைக்கும் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும்  பேருந்து ஓட்டுனர் மணிவண்ணனோடு தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே, மாணவர்கள் பேருந்து முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டனர்.

மேலும் பேருந்து ஓட்டுநரை தாக்கிவிட்டு அங்கு இருந்து மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுனர் மணிவண்ணன் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் சாமுவேல், அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய நவினை போலீசார் தேடி வருகின்றனர்.