×

’ஜாதி சொல்லி திட்டியதோடு அடிக்கவும் செய்தார்கள்’ இருளர் பெண் தனலட்சுமி

விழுப்புரம் மாவட்டம் தி.பரங்கனி எனும் சின்னக் கிராமத்தில் வசிப்பவர் தனலட்சுமி. இருளர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தக் கல்வி ஆண்டில் (2019 -2020) 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். தொடர்ந்து படிப்பதற்கு ஜாதி சான்றிதழ் அவசியம். தனலட்சுமி ஜாதி சான்றிதழ் கோரி முறையாக விண்ணபித்தும் அவருக்குக் கொடுக்கப்பட வில்லை. அப்பகுதியின் சமூகச் செயற்பாட்டாளர்கள் பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோரின் உதவியை நாடியிருக்கிறார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. இதனால் இந்தச் செய்தி பலரின் பார்வைக்குச் சென்றுவிட்டது. சமூக
 

விழுப்புரம் மாவட்டம் தி.பரங்கனி எனும் சின்னக் கிராமத்தில் வசிப்பவர் தனலட்சுமி. இருளர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தக் கல்வி ஆண்டில் (2019 -2020) 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். தொடர்ந்து படிப்பதற்கு ஜாதி சான்றிதழ் அவசியம்.

தனலட்சுமி ஜாதி சான்றிதழ் கோரி முறையாக விண்ணபித்தும் அவருக்குக் கொடுக்கப்பட வில்லை. அப்பகுதியின் சமூகச் செயற்பாட்டாளர்கள் பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோரின் உதவியை நாடியிருக்கிறார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. இதனால் இந்தச் செய்தி பலரின் பார்வைக்குச் சென்றுவிட்டது. சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

இதனால் அப்பகுதி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரடியாக தனலட்சுமியின் வீட்டுக்கே வந்தனர். அலுவகத்திற்கு வரச் சொல்லிவிட்டு சென்றனர். இன்னும் சில தன்னார்வலர்கள் கட்சிக்காரர்கள் தனலட்சுக்கு படிப்புக்கு பணம் அளித்து உதவினர்.

அடுத்த நாள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும்போதுதான் சிக்கலே தொடங்குகிறது. இது தொடர்பாக தனலட்சுமி எழுதியிருக்கும் புகாரில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

’நாங்கள் இருளர் ஜாதி இல்லை என்றும் எங்களுக்கு இருளர் எனச் சான்றிதழ் கொடுக்கக்கூடாது. எம்.பி.சி என்றே கொடுக்க வேண்டும் என்று சிலர் வம்பு வளர்த்தார்கள். பேச்சுவார்த்தை முற்றிபோய் அவர்கள் என் ஜாதியை சொல்லி திட்டி அடித்தார்கள்’ என்பதாகக் கூறியுள்ளார்.

தனலட்சுமியை மட்டுமல்லாது உடன் வந்தவர்கள் மீது அடிகள் விழுந்திருக்கின்றன. இது தொடர்பாக, இதில் தொடர்புள்ளவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய செய்ய வேண்டி கிளியனூர் காவல் நிலையத்தில் தனலட்சுமி விரிவாகப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே வேதனை. தனலட்சுமிக்கு ஜாதி சான்றிதழ் இல்லை என்பதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை என்றும் சொல்கிறார்களாம்.

விளிம்புநிலையில் இருக்கும் சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே பெரும்பாடு. அவர்களில் இருந்து முட்டிமோதி ஒருவர் அதிலும் ஒரு பெண் முன் வருவது அரிதினும் அரிது. அவரையும் இப்படி ஏதேனும் காரணத்தால் முடக்குவது விளிம்பு நிலை மக்கள் மேலே வரமுடியாமலே போய்விடுவதற்கான அபாயமே உள்ளது.