காதலை திடீரென கைவிட்ட பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்
புதுச்சேரியில் காதலித்த பெண் பேச மறுத்ததால், வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சர்மிளா(வயது 24). இவர் அண்ணாசாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திராநகரை சேர்ந்த ஜோசப்(36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜோசப் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்த நிலையில் ஜோசப்பின் பழக்க வழக்கம் சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை. எனவே அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோசப் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு, சர்மிளாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் வேலை செய்யும் துணிக்கடைக்கும் சென்று தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து பெரியகடை, ஒதியன்ஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் ஜோப்பை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இனச இரவு சர்மிளா வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஜோசப், இரு சக்கர வாகனத்தின் பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் அவரிடம் பேசாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப் ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை, சர்மிளா மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்த அவர், வலி தாங்க முடியால் அலறியபடி ஓடினார். இதனை பார்த்து அங்கு நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் அலறிஅடித்தபடி ஓடினர். ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜோசப் ஒதியஞ்சாலை போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ருதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒதியன்சாலை காவல் நிலையம் அருகே நடந்த சம்பவத்தால் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.