×

தன்னை காதலித்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம்- இளம்பெண் கொலை செய்த இளைஞர்

 

சென்னையில் தன்னை காதலித்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரியமேடு குமரப்பா தெருவில் எஸ்ஆர்எம் சென்ட்ரல் லாட்ஜ் என்ற பெயரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை  இளம்காதல் ஜோடி ஒன்று இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. அறை எண் 109 இல் தங்கிய காதல் ஜோடி இன்று காலை அறையை காலி செய்ய வேண்டும். ஆனால் 10 மணி ஆகியும் காதல் ஜோடி அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் ராஜேஷ் காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார்.  நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் உடனே கதவில் இருந்த சிறிய ஓட்டை வழியாக உள்ளே பார்த்த போது இளைஞர் தூக்கிட்டு தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெரியமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தங்கும் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கதவு உள்பக்கம் பூட்டி இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காதலன் தூக்கில் தொங்கிய நிலையிலும் காதலி படுக்கையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் காதல் ஜோடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில், விடுதியில் அறை எடுத்து தங்கிய காதலன் சென்னை ராமாபுரம் இந்திரா நகரை சேர்ந்த பாரதி பெருமாள் (21) என்பதும் காதலி சிவகங்கை மாவட்டம் பாரதி நகரை சேர்ந்த பவ்யா(21) என்பதும் தெரியவந்தது. நேற்று பாரதி பெருமாள் மற்றும் பவ்யா இருவரும் விடுதியில் அறை எடுத்து தங்கியதும் இரவு பாரதி பெருமாள் சாப்பிட உணவு வாங்க சென்றவர் உணவு வாங்காமல் அறைக்கு கதவை பூட்டி கொண்டது தெரியவந்தது. பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு ஆத்திரமடைந்த பாரதி பெருமாள் காதலி பவ்யாவை கத்தியால், கழுத்து, வலது மணிக்கட்டில் வெட்டி தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? இருவர் ஓரே அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்களா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இருவரின் செல்போன்களையும்  கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பவ்யா சென்னை வடபழனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்துள்ளார். அப்போது சாலிகிராமம் பகுதியில் திரைப்பட ஸ்டுடியோவில் பணியாற்றி வந்த பாரதி பெருமாளுடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது காதலாகி மாறியது. இந்த நிலையில் திடீரென பவ்யா பிரிந்து சென்றதாகவும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஹரி என்பவரை  காதலித்து வடபழனி முருகன் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் ஹரி தனது சித்தி வீடான சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பவ்யாவை தங்க வைத்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பவ்யா பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார் என்று கூறப்படுகிறது. நர்சிங் இறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக சென்னை வந்துள்ளார்.  வடபழனி பெண்கள் விடுதியில் தங்கி இருந்தவரை மீண்டும் பாரதி பெருமாள் சந்தித்ததாக தெரிகிறது. நேற்று சொந்த ஊருக்கு செல்வதாக விடுதியில் தெரிவித்துவிட்டு வெளியில் பாரதி பெருமாளுடன்  லாட்ஜிக்கு வந்து தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பெரியமேடு  லாட்ஜூக்கு அழைத்து சென்ற பாரதி பெருமாள் பவ்யாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் மின்விசிறியில் தனக்குத்தானே தூக்கிட்டு இறந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் பாரதி பெருமாள் கொலை செய்து விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 2 பேரது செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  2 பேரது குடும்பத்தினரையும் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.