×

கள்ளக்காதலி மரணம்! இரவோடு இரவாக சடலத்தை புதைத்த கள்ளக்காதலன்

 

ஆந்திர மாநிலம் தருமபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(45). இவரது முதல் மனைவி லட்சுமி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இவரிடம் ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் இருந்த வெங்கடேஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கடேஷ் ஆதரவின்றி புதுக்கோட்டையில் தர்மம் எடுத்து வந்த ஆராயி(40) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு பின்னர் அவரோடு சாலை ஓரத்திலும் கிடைக்கும் இடங்களிலும் வசித்து வரும் வெங்கடேஷ் சாலைகளில் கிடக்கும் பேப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை பொறுக்கி அதனை விற்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஆராயி கடந்த 10 தினங்களுக்கு மேலாகவே மது அருந்திவிட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஆராயி உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிவிஎஸ் கார்னரிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் மாணிக்கம் நகர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பராமரிப்பு இல்லாமல் உள்ள முருகன் கோயில் அருகே வெங்கடேஷ் உயிரிழந்த ஆராயியின் சடலத்தை கைகளாலே குழி தோண்டி புதைத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகவி தலைமையிலான நகர காவல் துறையினர் வெங்கடேஷிடம் விசாரணை மேற்கொண்ட போது ஏற்கனவே வெங்கடேஷின் மனைவி லட்சுமி காச நோயால் உயிரிழந்த நிலையில் அவரையும் யாருக்கும் சொல்லாமல் புதைத்து விட்டதாகவும் அதன்படி நள்ளிரவு உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்த ஆராயியின் உடல்களை கைகளாலே குழி தோண்டி அதிகாலையில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், வெங்கடேசை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் நகராட்சி பணியாளர்களை வரவழைத்து வெங்கடேஷ் புதைத்ததாக கூறிய ஆராயியின் உடலை தோண்டி எடுத்த போது அவர் ஆடையின்றி இருந்ததை தொடர்ந்து துணியால் அவரது உடலை மூடி பின்னர் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மேலும் ஆராயி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததால் அவரை வேறு எங்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் புதைத்து விட்டதாக வெங்கடேஷ் கூறக்கூடிய நிலையில் நகர காவல் துறையினர் முதற்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.

வெங்கடேஷ் கூறியபடி உண்மையிலுமே ஆராயி உடல்நிலை சரியில்லாததால் தான் உயிரிழந்தாரா? அல்லது மது போதையில் வெங்கடேஷ் ஆராயியை கொலை செய்து புதைத்து விட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் ஆராயியின் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு இதற்கான விடை கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கலைந்து போக சொல்லி அறிவுறுத்தி அந்த கூட்டத்தை கலைத்தனர். மேலும் வெங்கடேசிடம் இருந்த அவரது குழந்தைகள் என்று கூறப்படும் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி பெண்மணியின் சடலத்தை தோண்டி எடுத்த போது கதறி அழுத நிலையில் காவல்துறையினர் அந்த இரண்டு பேரையும் காப்பகத்திற்கு கொண்டு செல்ல அழைத்துச் சென்றனர்.