காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை சுட்டு தள்ளிய கணவன்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருந்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை நடுரோட்டில் சுட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிரோசாபாத்தில் உள்ள கோட்லா சுங்கி பகுதியில் உள்ள டி.ஏ.வி சந்தையில் இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 35 வயதானவர் ரிஷப் தைலாங். இவரது மனைவி 32 வயதான ஷிப்ரா. இவர் அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வருகிறேன் என குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, தனது ஆண் நண்பர் ஜிதேந்திர தாக்கூர் என்ற சன்னியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் ஷிப்ராவை பின் தொடர்ந்து வந்தபோது இருவரையும் ஒரே இடத்தில் கண்டதால் ஆத்திரமடைந்த ரிஷப், தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் நான்கு முதல் ஐந்து முறை இருவரையும் சுட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், சன்னி மார்பு/விலா எலும்புப் பகுதியில் இரண்டு குண்டுகள் உட்பட மூன்று குண்டு காயங்களுடன் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் ஆக்ராவுக்கு அனுப்பப்பட்டார். ஷிப்ராவுக்கு இடது தோள்பட்டை, வயிறு மற்றும் இடது விலா எலும்பில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. அவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஆக்ராவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ரிஷப் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் காலி தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கள்ள உறவே இதற்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. ரிஷபும் ஷிப்ராவும் தனியாக வசித்து வந்ததாகவும், அவர்களுக்கான விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.