தந்தை, மகனை வீடு புகுந்து வெட்டிய கூலிப்படை கும்பல்
விருதுநகரில் தந்தை, மகனை வீடு புகுந்து வெட்டிய கூலிப்படை கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில், 25.8.2026 இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த கூலித் தொழிலாளி கணேச பாண்டியன் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. தந்தையை காப்பாற்றச் சென்ற அவரது 18 வயது மகனும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். காயமடைந்த கணேச பாண்டியன் முதலில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறிப்பாக, தாக்குதலில் காயமடைந்த 18 வயது இளைஞர் அக்னிவீரராக இந்திய ராணுவத்தில் சேர தேர்வாகியிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருந்த இளைஞர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அவரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக குடும்பத்தினரும் கிராம மக்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் கிராமத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் இருந்ததா என்பதையும் காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஊர் மக்களும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.