×

மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய கொடூர கணவர்!

 

நெல்லையில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிய கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை வி.என். சத்திரம் இமானுவேல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அன்ன முத்துலட்சுமி (வயது 24). இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அன்ன முத்துலட்சுமி தனது அம்மாவான மாரியம்மாளை தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அப்போது அதிக மது போதையில் வந்த சங்கர் தனது மனைவி அன்ன முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் சங்கர் தனது மனைவியை சகோதரர்களான முத்துப்பாண்டி பிரசாந்த் ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினார். அப்போது அருகில் இருந்த மாரியம்மாள் அதை தடுக்க முயன்றால் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.இதையடுத்து அன்ன முத்துலட்சுமி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சங்கர், முத்துப்பாண்டி, பிரசாந்த் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நெல்லையில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் மருமகன் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.