☰
×

விவாகரத்து கேட்ட மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

 

கர்நாடக மாநிலத்தில் விவாகரத்து கேட்ட காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெலகாவி மாவட்டம், பைலஹொங்கலா தாலுக்காவில் உள்ள அமத்தூரு கிராமத்தில், விவாகரத்து கோரிய 31 வயது பெண் ஒருவர், செவ்வாய் கிழமையன்று தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர், பைலஹொங்கலா நகரில் உள்ள கொல்லாரா ஓனியைச் சேர்ந்த லட்சுமி மடமகேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் ராஜு மடமகேரி, லட்சுமியை கல்லால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். 

காவல்துறையின் தகவல்படி, ராஜுவும் லட்சுமியும் காதலித்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, லட்சுமி ராஜுவிடம் விவாகரத்து கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமத்தூரு அருகே உள்ள லட்சுமியின் பணி இடத்திலிருந்து, அவரை வீட்டில் விடுவதாகக் கூறி ராஜு அவரை அழைத்துச் சென்றதாகவும், பின்னர், அவர் லட்சுமியை கல்லால் தாக்கி, தடியால் அடித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பைலஹொங்கலா காவல்துறையினர் ராஜுவைத் தேடி வருகின்றனர். வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.