×

காதல் திருமணம் செய்த பெண்ணை கொடூரமாக கொன்ற பெற்றோர்! அதிரவைக்கும் ஆணவக்கொலை

 

பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் 20 வயதுப் பெண் ஒருவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோட்கபுரா அருகே உள்ள அமிர்தசரஸ்-பட்டிண்டா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு வயலில் 20 வயதுப் பெண் சடலம் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இறந்தவர் மஹாக்பிரீத் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மஹாக்பிரீத் கடந்த மே 4 ஆம் தேதி ஜகதீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர், அப்பெண்ணின் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் அவர்கள் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்டா பாய் கா கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த திங்கள்கிழமை மாலை தம்பதியினர் கோட்கபுராவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அமிர்தசரஸ்-பட்டிண்டா தேசிய நெடுஞ்சாலை அருகே அவர்களை வழிமறித்த மகாக்பிரீத்தின் குடும்பத்தினர், அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஜகதீப் சிங் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த தகவலைத் தொடர்ந்து, கோட்கபுரா துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், மற்ற காவல் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். இக்கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காகப் பல குழுக்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன. பிரேதப் பரிசோதனையின் மூலம் மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புலனாய்வாளர்கள் தடயவியல் மற்றும் சாட்சி ஆதாரங்களைத் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.